Tuesday, November 30, 2010

நிறைவாழ்வு என்பதெலாம் கல்வி யால்தான்!

காசிருக்கும் காரணத்தால் சிலபேர் இங்கே
கற்றவரைத் துச்சமென நினைக்கின்றார்கள்
காசிருக்கும் காரணத்தால் பலபேர் இங்கே
கல்வியினால் என்ன பயன்? என்கின்றார்கள்
தூசியிருக்கும் இடமெல்லாம் நோயி ருக்கும்
செல்வமது சேருமிடம் மாசும் சேரும்
மாசில்லாக் கல்வியொன்றே செல்வ மாகும்
மன்பதைக்கே அதனால்தான் பெருமையாகும்!

படிக்கின்ற காலத்தில் ஊரைச் சுற்றிப்
பொழுதுகுளைப் பொறுப்புகளைச் சிதைத்தோர் இன்று
படிக்கவில்லை தம்மக்கள் என்றால் ஏனோ
பதறுகின்றார்! புலம்புகின்றார்! என்ன நீதி?
தடித்தனங்கள் நம்நாட்டில் வளர்வதும் ஏன்?
தகுகல்வி இல்லாமை என்பதால்தான்!
குடித்தனங்கள் இருள்மூழ்கிக் கிடப்பதும்ஏன்?
கல்வியுனும் வெளிச்சமிலாக் காரணந்தான்!

முறையான கல்வியினால் சேர்க்கும் செல்வம்
முப்போதும் நிலைத்திருக்கும் பயன்கள் நல்கும்!
முறையற்ற நெறிகளிலே சேரும் செல்வம்
மின்னலென மின்னும்பின் மறையும்! மண்ணில்
நிறைவாழ்வு என்பதெலாம் கல்வி யால்தான்!
நம்மில்பலர் வாழ்வதெல்லாம் வாழ்வே அல்ல!

அரைகுடங்கள் ஆர்ப்பரிப்பு! அலட்டல்! ஆமாம்!
அறிவுலகம் அன்னவற்றை ஏற்பதில்லை!

வேலூர். ம.நாராயணன்

Wednesday, November 24, 2010

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians)

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians) என்று அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலி ஹுசைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா கி பி (980 - 1036) மருத்துவ துறையின் மாமேதையாக விளங்கினார். இப்னு சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.

இப்னு சீனா கிட்டத்தட்ட 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மருத்துவ நூல்கள் மட்டும் 16 ஆகும். இதில் 8 நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல்
அல் கானூன் பித்திப் ஆகும்.

இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன்
லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இப்னு சீனா எழுதிய "அல் - கானூன் பித்திப்" என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- S.H.M. முஹையதீன் அவர்கள் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் முஸ்லிம்கள் எனும் நூலிலிருந்து...

Saturday, November 20, 2010

பெரிதாக குறிவை

'பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை  விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.
 
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள்.
 
நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.
 
தொகுப்பு: கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத் 

Monday, November 15, 2010

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

இந்த இனிய திருநாளில்  நாம் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ  இறைவனை வேண்டுகிறேன்.
 

இம்தியாஸ் புஹாரி மற்றும் குடும்பத்தினர்

Tuesday, November 09, 2010

உனக்கென்ன மனக் கவலை ? - கவிதை

முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற
முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற
அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே
அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை ?

கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன்
கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு
சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க
சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை ?

பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும்
புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும்
கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும்
கருணை நபி ஹதீஸ்இருக்க  உனக்கென்ன மனக்கவலை ?

துன்பத்தில் துயரத்தில் இன்பத்தில் இலட்சியத்தில்
தொடராக விளைகின்ற சோதனையில் வேதனையில்
புண்பட்ட மனத்தவரும் பண்பட்டு நடை பயில
புகழ்ஸஹாபி வாழ்விருக்க உனக்கென்ன மனக்கவலை ?

உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைகட்கும்
இன்னதுதான் ஆகுமென்றும் இதுவெல்லாம் ஆகாதென்றும்
கண்ணியமாய்ப் பிரித்தெடுத்து சட்டங்கள் சமைத்தெடுக்கும்
ஷரீஅத்தின் தெளிவிருக்க உனக்கென்ன மனக்கவலை ?

இருளுக்கு ஒளிவிளக்கு ! இல்லார்க்கு அருள்விளக்கு !
இம்மைக்குச் சுடர்விளக்கு ! மறுமைக்குத் தொடர்விளக்கு !
அருளுக்கு அருளான இஸ்லாமே  இருக்கையிலே
அல்லாஹ்வின் அடியானே ! உனக்கென்ன மனக்கவலை ?

நன்றி : குர்ஆனின் குரல்
”முதுவைக்கவிஞர் “
அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

Monday, November 08, 2010

வெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம்

புதுடில்லி : இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் வெறும் காய்கறிகளை மட்டும் உட்கொள்ளும் சைவ பிரியர்களுக்கு விட்டமின் பி - 12 குறைவால் மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன், முட்டை, இறைச்சி, பால் மற்றும் அதன் துணை பொருட்களில் விட்டமின் பி - 12 சத்து அதிகமாக உள்ளது. விட்டமின் பி - 12 குறைபாடு மூளையின் செயல்பாட்டைப் பாதித்து நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறனை குறைத்து விடும். இது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குர்கானில் உள்ள அர்டீமீஸ் சுகாதார நிறுவனத்தின் நியூராலஜிஸ்ட் பிரவீன் குப்தா கூறுகிறார்.

மேலும் அவர் கூறும் போது "இந்திய மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்பவர்களாகவும் தினந்தோறும் உட்கொள்ளும் பாலின் கொள்ளளவு குறைந்திருப்பதாலும் அவர்கள் டிமென்டியா நோய்க்கு விரைவிலேயே ஆட்படுவதாக" விளக்கினார். உலக சுகாதார நிறுவனம் 2000ம் ஆண்டிலேயே இந்தியாவில் 35 இலட்சம் அல்ஜீமீர் மற்றும் டிமென்டியா நோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வகையான மூளை கோளாறின் அறிகுறிகளாக அன்றாட நடவடிக்கைகளை மறந்து போதல், தெரிந்தவர்களின் பெயர்களை மறத்தல், அடிக்கடி எரிச்சல்படுதல் மற்றும் மன உளைச்சல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். சாதாரண ரத்த பரிசோதனையிலேயே இந்நோயை கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் 1 கோடியே 80 இலட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025-ல் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி : இந்நேரம்

Sunday, November 07, 2010

சிறுவர்கள் வாழ்வோடு விளையாடும் "வீடியோ கேம்'

மதுரை :"வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.

தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.

தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது: வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

Saturday, November 06, 2010

சாதிக்க வேண்டுமா ???

  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் தேவை
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு தேவை
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் தேவை
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் தேவை
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் தேவை
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை தேவை
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு தேவை
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தைரியமான மனம் தேவை
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் தேவை
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் தேவை
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் தேவை
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் தேவை
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் தேவை
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை தேவை
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை தேவை
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்புணர்வு தேவை
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் பக்குவம் தேவை
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை தேவை
 நன்றி : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (அனுப்பித்தந்தவர்)

Monday, November 01, 2010

புலிவாலை பிடித்த வாழ்க்கை

பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!    
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?

வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!

ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!

சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!

வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?

கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!

ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!

நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை

- வலையில் பூத்தது