Friday, September 10, 2010

ஈதென் வாழ்த்துகளே! - கவிதை

மாதம் ஒன்று மலர்ந்ததுவே
மண்ணில் மனிதம் புலர்ந்ததுவே
வேத வெளிச்சம் படர்ந்திடவே
உள்ளம் தூய்மை அடைந்திடுமே!
நீத நெறிகள் துலங்கியதால்
நன்மை தீமை விளங்கியதே!
மீத வாழ்வும் ஒளிபெறவே
மீட்சி என்றும் இறையிடமே!

பொய்யும் புறமும் அற்றிருந்தோம்
பாவம் தொலைக்கக் கற்றிருந்தோம்
மெய்யின் மெய்யை அறிந்திட்டோம்
மேன்மை நோன்பைப் புரிந்திட்டோம்
செய்யும் செயலில் உள்ளெண்ணம்
சிறப்பாய் இறையைச் சார்ந்துவிடின்
உய்யும் வழியும் நமதாகும்
உணர வைத்தான் இறையவனே!

நோன்பை சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்.
தான்தான் என்னும்  தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே...
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே!


by--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

No comments: