அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே மருத்துவ பயன்பாடு கொண்டவைதான். தமிழர்களின் சமையலில் கொத்தமல்லிக்கு தனி இடம் உண்டு.
கறிவேப்பிலை, புதினாபோல கொத்தமல்லியும் நமது அன்றாட சமையலில் இடம்பெறும் மிகமுக்கிய பொருளாகும். வாசனை மிக்க கொத்தமல்லி செடியை பல விதங்களில் பயன்படுத்தலாம். சாம்பர், ரசம் போன்றவற்றில் நேரடியாக பயன்படுத்துவதோடு, சட்னியாகவும், கீரையாகவும் பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லியின் விதைகள், விதைப்பொடி இலைகள் தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இதில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 1.5 சதவிகிதம் உள்ளது. டெல்டாலினலூல், கொரியாண்டிரினால், ஆகியவை காணப்படுகின்றன. இவற்றுடன் ஆல்ப்பாபைனெனி மற்றும் டெர்பினைன் ஆகியவையும், ஃபிளேவனாய்டுகள், கௌமார்னின்கள், ஃபினோலிக் அமிலங்களும் காணப்படுகின்றன. இவையே கொரியாண்டிரியத்தின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ளன.
மருத்துவ குணங்கள்
உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்தும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்றுக் கோளாறுகளுக்கு,மருந்தாகப் பயன்படும்.சீரண சக்தியை அதிகரிக்கும் புளித்த ஏப்பம் நீங்கும்
கண்கள் பலப்படும்
விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பித்தநீர் சுரப்பி நோய்கள், குடல்புழுக்கள், ஆகியவற்றிற்கு எதிராக செயல்படக்கூடியவை. உடலின் வெப்பத்தை தணித்து குளுமையாக்குகிறது.
சிறுநீர்ப் போக்கு தூண்டுதல், மலச்சிக்கல் தீர்த்தல், கமறிய தொண்டை, வாந்தி ஆகியவற்றிலும் உதவுகிறது.
மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும். பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
சளிப் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
பித்தம் குறையும்
சுக்கு, மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு குவளைத் தண்ணீரில் 1 தேக்கரண்டி பொடியைப் போட்டு கசாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். இது ஜீரணத்தை அதிகரிக்கும் பானமாகும்.
கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்றுப் போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.
அஜீரணம் போக்கும்
ஏலம் மற்றும் சீரகத்துடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது சிறந்த வயிற்று வாயு போக்குவியாக செயல்படுகிறது. உடல்வெப்பம் மற்றும் தாகத்தினை தீர்க்கும். வறுத்த விதைகள் அஜீரணத்தை போக்கும். தலைவலிக்கு மேல்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பாலியல் தூண்டுவியாக பயன்படுத்தப்படுகிறது.
முழுத்தாவரம் பெரும்பாலும் மணமூட்டும் பொருளாக பயன்படுகிறது. இதன்சாறு தோலின் மீது தோன்றும் சிவப்புத்திட்டுக்களை குணப்படுத்தும். வயிற்றுவலி, உப்புசம் மற்றும் குருதிப்போக்குள்ள மூலநோய்களை இது குணப்படுத்துகிறது.
நன்றி : தட்ஸ்தமிழ்