Saturday, March 26, 2011

அல்சரா...? அது ஏன் வருது??

வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு  ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...


நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.

நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது! 

நன்றி : முகம்மது சுல்தான்

Thursday, March 10, 2011

பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை

முஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 234 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர். அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3 பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த கால சமூகப் பொருளாதார போக்கின் அடிப்படையிலும், தற்போது அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அந்த ஆய்வறிக்கை, இதே போக்கு நீடித்தால் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72 லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

இந்தோனோஷியாவை பாகிஸ்தான் முந்திவிடும்

மேலும் இன்றைய நிலையே நீடித்தால், உலகின் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் (சுமார் 60 விழுக்காடு) ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தான் வசிப்பார்கள் என்றும், 20 விழுக்காட்டினர் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.

அதே சமயம் இஸ்லாமிய மக்கள் தொகையில் இந்தோனேஷியாவை, பாகிஸ்தான் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றாலும், 2030 வாக்கில் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

1990 லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.

- நன்றி.. தீக்கதிர்