Monday, February 28, 2011

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.  பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக  பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து  அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு? 

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள்         (Lower Case)         : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன்      (Upper Case)          : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols)      : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்              (Lower Case)          :  4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன்           (Upper Case)          : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)         : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன்  (Num & Symbols)       : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)         : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)       : 44,530 வருடங்கள்

நன்றி: நதிக்கரை

Sunday, February 27, 2011

கறிவேப்பிலை ஒரு மாமருந்து!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி : sambala87(சூரியன்)

Tuesday, February 22, 2011

மன ஊனமில்லா மணமகன் தேவை!!!

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு
மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல
நீ கொடுக்க வேண்டிய மஹரை
பெண்ணான என்னிடம் கேட்க
நீ கேட்ட மஹரை கொடுக்க
என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்
தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த
உன் தாயும், உன் சகோதரியும்
பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்
என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்
வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து
எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்
நீங்கள் தெளிவாக சொன்னால்தான்
அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது
லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்
பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து
ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்
எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய
எத்தனை பேருக்கு பசியாற தருவிய!
(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)

மனை உள்ளது வீட்டை
கட்டி கொடுத்து விடுங்கள்!
 (தற்பொழுது குடிசைதான் வீடாம்)
என் குடும்ப சூழ்நிலையில்
இந்த சம்பந்தம் அமையுமா
மணமேடையில் அமருவோமா
என்று மனதுக்குள் அழ!

என் தந்தையோ நோயின்
வாசல்படியை தட்ட
நானோ வீட்டின் நிலைப்படியில்!
எத்தனையோ பேர் என்னை
பெண் பார்த்து சென்ற பிறகும்
இன்னும் முதிர் கன்னியாக
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க
வந்தவர்களில் சிலர்
என் பையன் சிகப்பு பெண்தான்
பார்க்க சொல்கிறான்
பெண் கருப்புதான்
இருந்தாலும் நாங்கள் கேட்பதை
(வரதட்சனையை) தந்து விட்டால்
என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்!
பணம் படைத்தவர்களின்
கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து
கருப்பு நிற பெண்களை
கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன்
ஜமாத்தில் லட்டர் வாங்கி
ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்
என்று முகம் தெரியா ஊரில்
பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்
பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது
உதவி செய்யுங்கள் என்று
துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்
கோபம் வரவில்லையா?
என்ன செய்தாய் நீ?
என் தாய் தந்தை மனம்
கோணாமல் நடப்பேன் என்றாய்!

இளைஞனே திருமணம் முடிக்கும்
நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்
மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்
இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண
பேச்சு வார்த்தையில் மட்டும்
என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!

இளைஞனே உன் தெருவில்
திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க
நீயோ பணம் படைத்த வீட்டில்
பெண்ணை தேட!
அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு
வேற வழி இல்லை என்று
பிறமத பையனோடு ஓட!
இப்பொழு வருகிறது உனக்கு கோபம்
என் தெரு பெண்எப்படி ஓடலாம்!
அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும்
உன்னை போன்றவர்களும்
காரணம் இல்லையா?

முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்
நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு
பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு
கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை
என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை!
மறுமை பயமும் இல்லை உனக்கு!

மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு - எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ  காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!
உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்
விழித்தெழுங்கள்!
இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்
நாளை மஹ்ஷர் பெருவெளியில்
இறுதி தீர்ப்பின் நாளின்
அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்
என்ன பதில் சொல்வாய்
தாய் தந்தையை கை காட்டுவாயா?
முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்
காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்
வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து
நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்
இந்த வரதட்சனை என்னும் கொடுமையை
அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!
இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.


எஸ். அலாவுதீன் 
நன்றி : அதிரை நிருபர்

Wednesday, February 02, 2011

துனிசியா : " மல்லிகை புரட்சி "

துனிசியாவின் தேசிய மலர் மல்லிகை. துனிசிய புரட்சிக்கு 'மல்லிகை புரட்சி' என்று முதன்முதலில் தன் வலைப்பதிவில் பெயரிட்டவர்... பிரபல ஊடகவியலாளரும் ஒரு பிரபல துனிசிய பதிவருமான ஜியாத் அல் ஹானி..! இந்த புரட்சி பற்பல வருடங்களாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த நெருப்புதான்.
ஜைனுல் ஆபிதீன் பின் அலி
1956-ல் பிரான்ஸ் அரசு துனிசியாவிற்கு சுதந்திரம் கொடுத்து ஆட்சியை சுதந்திரம் கேட்ட ஒரு கட்சி RCD (Constitutional Democratic Assembly) -யின் தலைவர் ஹபீப் பொற்குய்பாவிடம் ஒப்படைத்து சென்றது. இவர் அதிபரானார். 1975-ல் இந்த கட்சி அரசு இவரை 'காலமுள்ளகாலம் வரை அதிபராக' நியமித்தது. பின்னர், 1987-ல் இவர் புத்தி சுவாதீனமற்று போய்விட்டதால், அப்போதைய பிரதமர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அதிபரானார். முதலில் எதிர்க்கட்சி என்றபெயரில் உள்ள அனைவரையும் 'அப்புறப்படுத்தினார்'. அப்போது நன்கு வளர்ந்திருந்த பிரதான எதிர்க்கட்சியான 'நஹ்டா' என்ற இஸ்லாமிய கட்சிதான் அரசின் முக்கிய அழித்தொழிப்பு இலக்கு. அதன் தலைவர் ரஷித் கொன்னோச்சி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். (23 ஆண்டுகள் கழித்து முந்தாநாள்தான் நாடு திரும்பியுள்ளார்)


அதன் பின்னர், அதிபர் அலி தேர்தலில் நின்றார். பல கட்சி போட்டி, மும்முனை போட்டி, இருகட்சி தேர்தல் மாதிரி அல்லாமல் இது ஒரு கட்சி தேர்தல் முறை. இவரின் பிரபலமான 'நமக்கு நாமே ஓட்டளிப்பு திட்டப்படி'...
99,27% ஓட்டுக்கள் 1989 தேர்தலிலும்,
99,91% ஓட்டுக்கள் 1994 தேர்தலிலும்,
99,45% ஓட்டுக்கள் 1999 தேர்தலிலும்,
99,49% ஓட்டுக்கள் 2004 தேர்தலிலும்,
89,62% ஓட்டுக்கள் 2009 தேர்தலிலும் பெற்று அமோக வெற்றி ஈட்டி தொடர்ந்து அதிகாரத்தில் அதிபராய் இருந்தார். முக்கியமான விஷயம் என்னவெனில் இவர் கட்சி ஒரு தொகுதியில் கூட தோற்றதில்லை..! இப்படிப்பட்ட ஒரு உன்னத மக்கள் ஆதரவு பெற்ற அதிபரை, ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து ஓராண்டுக்குள் நாட்டை விட்டே வெளியேற்றியது உண்மையானால், அந்த அனைத்து தேர்தலிலும் அதிபர் 'வெற்றி(?)பெற்றது' எப்படி உண்மையாக இருக்கும்..?
2005-ல், உலக காட்சி ஊடகங்கள் மற்றும் ஐநா-வின் நேரடி மேற்பார்வையில் நேர்மையாக நடைபெற்ற பாலஸ்த்தீன ஜனநாயக தேர்தலில், எதிர்பாராத வகையில் ' மேற்கத்தியரின் நண்பர்கள்' ஃபதாவிற்கு, பதிலாக 'எதிரிகளான-பயங்கரவாத' ஹமாஸ் வெற்றி பெற்று விட அனைத்து வாக்குறுதிகளுடன் சேர்த்து மொத்த தேர்தலையே குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து 'இது செல்லாது' என்று அழுகுணி ஆட்டம் ஆடிய 'உலக ஜனநாயக காவலர்'களான அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் பலர், இன்று வரைக்கும் இந்த துனிசிய ஜனநாயக தேர்தல் படுகொலை பற்றி மூச்சு விட்டதில்லை. மாறாக, மற்ற அரபுலக நாடுகளுக்கு துனிசியா ஒரு முன்மாதிரி நாடு என்றுதான் பலமாக பலமுறை பாராட்டி இருக்கிறார்கள்.

ஏன்? என்ன காரணம்? அதிபர் அலியின் ஆட்சிமுறை மற்றும் இஸ்லாமிற்கு எதிராக அவர் இயற்றிய சட்டங்கள்தான் காரணம். ஒரு குஜராத் முஸ்லிமிற்கு கூட துனிசியாவில்... ஒருநாள் கூட வாழ பிடிக்காது. அப்படி என்னென்ன கடும் சட்டங்கள் அவை?
முதலில் மக்கள் யாரும் எங்கும் பொதுக்கூட்டம் போட முடியாது.

பத்திரிக்கைகள் காட்சி ஊடகங்களின் செய்திகள் உட்பட அனைத்தும் அரசு தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும்.

வீடுகளிலும் கூட்டமாகவோ குழுவாகவோ இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய முடியாது.
ஒரு முஸ்லிம்... ஒரே ஒரு பள்ளிவாசலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஐடி கார்டு பஞ்சிங் சிஸ்டம் உள்ளது. அவர் வேறு பள்ளிவாசல் சென்று தன் கார்டை தேய்த்தால் பள்ளிவாசல் கதவு திறக்காது. அதாவது மக்களுக்குள் புதியபழக்கம் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடு..!

தொழுகை நேரம் மட்டுமே பள்ளிவாசல் கதவு லாக் சிஸ்டம் திறந்திருக்க அனுமதி.

கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பூட்டப்படாமல் தொழுகையில் ஈடுபட்டால் அடி-உதை.

வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவில் கூட இமாம் அதிபரின் சாதனைகள் திட்டங்கள் பற்றி மட்டும்தான் புகழ்ந்து பேச வேண்டும்.

தொழுகைக்கு அழைக்க பாங்கு சொல்வதற்கும் கூட தடை.

ஒரு கணவன் இரண்டாவது திருமணம் செய்ய தடைச்சட்டம்.

கருக்கலைப்புக்கு ஆதரவாக அதை செய்ய வலியுறுத்தி சட்டம்.

நாட்டின் கடற்கரையை ஐரோப்பிய, அமெரிக்க மியாமி பீச் போல அனைத்து ஆபாச கூத்துக்களுக்கும் மதுக்கேளிக்கைகளுக்கும் திறந்து விடப்பட்டது.

பெண்களின் இஸ்லாமிய ஹிஜாப் ஆடைமுறைக்கு நாடெங்கும் தடை. மீறி அணிந்தால் தண்டனை.

முஸ்லிம் ஆண்கள் தாடிவைக்க, தொப்பி, தலைப்பாகை அணிய தடை. மீறினால் தண்டனை.

சிறைவாசிகள் குர்ஆன் ஓத, தொழ, நோன்புவைக்க தடை.

இஸ்ரேலுடன் கூட்டணி போட்டு அவர்களின் தூதரகம் துனிசியாவில் திறப்பு.

எங்கும் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல், காட்டுமிராண்டி தர்பார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு... (முக்கியமாய் அவர்கள் அனைவரும் அதிபரின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்) எக்கச்சக்க வருவாய்... எந்தளவு என்றால், நாட்டின் கடனை விட இவர்களின் இலாபம் அதிகம் எனும் அளவிற்கு..! (உபயம் விக்கிலீக்ஸ்)

வேலையின்மை, வறுமை என சாமானிய மக்கள் பசித்திருக்க, அதிபர் தன் ஆடம்பர உல்லாச பங்களாவில் புசித்திருக்க... நீண்ட காலமாய் கனன்று கொண்டிருந்த இந்த தீக்கங்கு திடீரென்று பற்றி எரிய ஆரம்பித்தது எப்போதெனில்... ஒரு வேலையில்லா பட்டதாரி தன் வயிற்றுப்பிழைப்பிற்காக பழக்கடை திறக்க, 'அதற்கு அரசு அனுமதி இல்லை' எனக்கூறி கடையை முதலுடன் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நாசம் பண்ண, வெறுத்துப்போன இளைஞன் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட போதுதான்..!

முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்வதே மறுமைப்பேருக்காகத்தான். ஆனால், எவ்வளவோ மோசமான நிலையிலும் அம்மக்கள் சமாளித்து இவ்வுலகில் வாழக்கற்றிருந்தாலும், இப்போது 'முதலுக்கே மோசம்' என்பதுபோல, "உனது இந்நாட்டில் வாழ்வதை விட எனக்கு நரகம் எவ்வளவோ மேல்" என்று மருத்துவமனைக்கு பார்க்க வந்த அதிபரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டது அந்த இளைஞனின் தற்கொலை..!

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை !

[[[ ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706) ]]] ௰இதில் இருக்கிறதே அழகிய முன்மாதிரி..!

ஒருவேளை அந்த முஸ்லிம் தலைவர் அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு மக்களை வழி நடத்தாமல், நபிவழியை பேணி வாழாமல், தன் மனம்போன போக்கில், அமெரிக்கா/பிரான்ஸ் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு ஹலாலை ஹராமாக்கி, ஹராமை ஹலாலாக்கி, மக்களை துன்புறுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்துக்கொண்டு, இஸ்லாத்திற்கு எதிரான போக்கில் அடக்குமுறையினால் சர்வாதிகார ஆட்சி நடத்தினால்???

அந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படவோ கீழ்ப்படியவோ அவசியமில்லை என்பதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதம்..!
'இனியும் பொறுமையுடன் இருந்தால்...முஸ்லிம்கள் என்ன... நாம் மனிதர்களே இல்லை' என்ற இறுதி நிலையில்தான் துனிசியா மக்களின் கிளர்ச்சி, இணையமும், உள்நாட்டு ஊடகமும் முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், சேட்டிலைட் சேனலான அல்ஜசீரா மூலம் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, புரட்சியாக மாறி அதிபரை பதவி இறங்க கோர வைத்தது.

மேலும், எங்கோ ஓர் இடத்தில் இரு ராணுவ வீரர்கள் புரட்சியாளர்களுடன் இணைந்து கட்டித்தழுவி முத்தமிடும் விடியோ கிளிப்பிங்கையும், இரு காவலர்கள் மக்கள் புரட்சியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்து அழுத விடியோ கிளிப்பிங்கையும் திரும்பத்திரும்ப அல்ஜசீரா டிவி போட்டுக்காட்டி, "ஓ மக்களே, உங்களுக்கு பின்னால் போலிசும் மிலிட்டரியும் உள்ளன, தைரியமாக போராடுங்கள்" என்ற கருத்து மக்கள் மனதில் ஊன்றப்பட்டது. இது இருதரப்பினரையும் சகோதரர்களாய் பார்க்க வைத்தது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல ராணுவம் புரட்சியாளர்களுடன் சேர்ந்து காவலர்களை எதிர்க்கவும் புரட்சி முழுமைபெற்று, அதிபர் தம் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட வைத்த பெரும் மக்கள் புரட்சியாக மலர்ந்து 'மல்லிகை புரட்சி' எனும் பெயரில் வெற்றிகரமாய் இனிதே நிறைவுற்றது..! அதுவரை நாட்டை கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த 1500 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் அதிபர் குடும்பம் தப்பியது மட்டுமே சிறு சறுக்கல்.

அதன் மறுபக்கம்

ஓட்டம் எடுத்த அதிபர் ஒவ்வோர் நண்பத்துவ நாடாய் சென்று யாரும் இடமளிக்கா நிலையில் இறுதியில் சவூதியில் தஞ்சம்..! என்ன கொடுமை..? எந்த பாங்கு ஒலியை கேட்கக்கூடாது என்று நினைத்தாரோ அதையே ஐந்து வேலை கேட்கும் ஒரு நாட்டில், முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் மற்ற சமய மக்களையும் ஹிஜாப் ஆடை பேணச்சொல்லும் ஒரு நாட்டில் மனைவியுடன் அதிபர் தஞ்சம் புகுந்திருக்கிறார். இதுதான் காலத்தின் கோலம்..!

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் நண்பர்களுக்கு எதிராகவோ, பொதுவாக முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பு செயலை செய்தாலும்... மேற்கத்திய ஊடகங்களால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசப்படும். ஆனால், இந்த பிரம்மாண்ட புரட்சிக்கு "இஸ்லாமிய புரட்சி" என்றோ "முஸ்லிம்களின் எழுச்சி" என்றோ மறந்தும் கூட சொல்லவில்லை.

அதேபோல், இஸ்லாமிய நாடுகளில் ஏதும் ஒரு துப்பாக்கிச்சூடோ, மரண தண்டனையோ அரசால் நிகழ்ந்தால் உடனே அதை 'இஸ்லாமிய அடிப்படைவாதம்', என்பர். ஒரு நாட்டின் ராணுவத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினால் அவர்களுக்கு 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்' என்றும் பெயரிடுவர். இங்கே இதெல்லாம் காணோம். காரணம் 'மல்லிகை' என்ற முகமூடியுடன் அவ்வளவு சுத்தமாக தெளிவாக 'இஸ்லாமிய புரட்சி' நடந்திருக்கிறது.

தற்போது இடைக்கால அதிபராய் பதவி ஏற்றவறும் மற்றும் ஆளும் இடைக்கால அரசிலும் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் அதே (RCD) கட்சியினர்தான் உள்ளனர். அதாவது கதவு வழியாக கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டோர் ஜன்னல் வழியாக மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். இது நிச்சயம் நிலைக்காது. பெருவாரியான மக்களுக்கு அந்த கொள்ளைகூட்ட கட்சியே பிடிக்க வில்லை. முழுமையான மாறுதலே சரியான முடிவாக இருக்கும்.
ரஷித் கொன்னோச்சி
ஏனெனில், முன்னர் தடை செய்யப்பட்ட 'நஹ்டா' என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் இப்போது மீண்டும் துனிசியா வந்துள்ளார். வெவ்வேறு நாடுகளில் இருந்த அந்த இயக்கத்தினரும் தாயகம் திரும்புவதால் இயக்கம் மீண்டும் வலுப்பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கங்களுடன் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்ட ரஷித் கொன்னோச்சி அளித்த பேட்டியில், "நான் அரபுலகம் அனைத்துக்குமாய் திரும்பி இருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அனால், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும், கட்சிகளை தடை செய்வதை நிறுத்தி, அதன்மூலம் ஒருகட்சி தேர்தல் முறையை மாற்றி இனி பல கட்சி தேர்தல் முறையை நிறுவி, ஊழலையும் அடக்குமுறையையும் தகர்ப்பதிலும் உதவுவதே லட்சியம்" என்று கூறினார்.

98% முஸ்லிம்கள் வாழும் நாட்டில், 'Secular Rule' என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. நிச்சயம் இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் முக்கியமாக இஸ்ரேலுக்கும் பெரிய அடி. இன்ஷாஅல்லாஹ், இனிதான் துனிசியா முஸ்லிம்களின் நாடாக மாறக்கூடும்.

நன்றி : சகோ. : முஹம்மத் ஆஷிக்