Monday, August 30, 2010

THE BENEFITS OF A POSITIVE ATTITUDE

These are many and easy to see. But what is easy to see is also easy to miss. To mention a few, a positive attitude
  • increases productivity
  • fosters teamwork
  • solves problems
  • improves quality
  • makes for congenial atmosphere
  • breeds loyalty
  • increases profits
  • fosters better relationships with employers, employees, and customers
  • reduces stress
  • helps a person become a contributing member of society and an asset to their country
  • makes for a pleasing personality

Sunday, August 15, 2010

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?



உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.

தகுதிகள்
ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.

மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால் அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக 'இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு பிடிவாதமா?' 'உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா' என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும். மேலும் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும் கூடாது, இதுவும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.

பெற்றோர்களின் முக்கியமான கடமைகள்
பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று. என்பது எனது கருத்து.

மேலும், ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும் அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும் கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.

இஸ்லாமியப் பார்வையில் ஒரு நல்ல பெற்றோர்
எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும்கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்;காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது. அல்லாஹ்வினால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், தீன் வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.

நாமும் நல்ல கணவன்-மனைவியாக நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன் அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின்; கடமையாக இறைவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில் பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு. இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.

இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் ஓரளவு முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது இதை மென்மேலும் அதிகரிக்க வேண்டும். இஸ்லாமிய சட்டதிட்டங்களையும், நெறிமுறைகளையும் மீறாமல் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் எல்லா துறைகளிலும் வளர்ந்து பங்காற்ற வேண்டும். இதை எல்லா பெற்றோர்களும் முறைப்படி பின்பற்ற வேண்டும்.
 
உலகத்தில் எல்லோரும் நல்ல பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும் மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும். அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் வெற்றி பெறும் பிள்ளைளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.
ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை நல்லவர்களாக்கலாம் பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.
எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன்.

நன்றி- சகோ. அக்பர் அலி - பைன், ஜித்தா

Friday, August 13, 2010

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது. 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.

ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.

சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.

பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.

அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.

பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.

ஒரு இறைவன்!
ஒரு தூதர்!
ஒரு கிப்லா!

பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.

உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.

சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். “பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.

பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?

இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:
ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட “அல்ஹாகிம்” என்ற பதம் இதை உணர்த்துகின்றது.

அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.

“அப்துல்லாஹ் இப்னு உபை” எனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் தடுக்கவில்லை. “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80) என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!” என்றார்கள். பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)

மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது. இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது. எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.

பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:
நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

இஸ்லாத்தில் நடந்த முதல் போரான “பத்ர்” கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன. உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு support பண்ணுவதாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

பிரிவினை ஏன்?
குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.

மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.

இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;

    -1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம்:

    இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
     -2- இஜ்திஹாதுக்குரிய அம்சம்
    உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?
     -3- நிர்வாக ரீதியான முடிவு:
    வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?

    இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வதென்றால் எமக்கு ஆட்சேபனையில்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.

எனினும், குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணவும், தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும், போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதாரணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்துகின்றான் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களையும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்?

உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.

எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்புகளையோ சிதைக்காத விதத்தில் கையாளப்பட வேண்டும்.

பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது. குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

Thursday, August 12, 2010

முதலில் போதிக்க வேண்டியது அகீதாவா? கிலாஃபத்தா?

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.
“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடாத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.
மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.
அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும். ஒற்றுமை குழைந்து விடும். ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.
மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அரசாங்கமொன்றை நிருவினால் அதிகாரபூர்வமாக ஒரே கொள்கையின் கீழ் மக்களை வழிநடத்தலாம் என வாதிக்கிறார்கள்.
உண்மையில் இந்த கொள்கையும் அணுகுமுறையும் சரியல்ல. கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் அடிப்படைக்கே முரணானதாகும்.
ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான்.
அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமலும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேரத்தும் (ஷிர்க் செய்தும்) செயற்படுவதும் அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.
தனக்கு (ஷிர்க்) இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். மக்களிடம் ஷிர்க் நுழைந்த போதுதான் இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.
மனித ஆத்மாக்களை படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் பதில் கூறின. உலகிற்கு வந்த பின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் வணங்காது வாழந்தபோதுதான் இந்த இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.
இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலம் எல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பாழாகிவிடும்;
அதே நிலையில் அவன் மரணித்தாலும் தண்டனைக்குரியவனாக மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாவை சீர் படுத்துவதிலும் பின்பற்றுவதிலும்தான்.
அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வர்ணிக்கின்ற பிரகாரமும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணிக்கின்ற பிரகாரமும் தான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுவே ஈமானுக்கு பாதுகாப்பாகும்.
அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
எல்லா பொருட்களிலும் வஸ்துகளிலும் அல்லாஹ் சங்கமிக்கிறான்
அல்லாஹ் ஷைக்கிடத்தில் சூபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.
அமல்கள் இபாதத்கள் செய்தால் அல்லாஹ்வை நெருங்கமுடியாது. அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை. மறுமையின் வெற்றிக்கு அவரது சிபாரிசு தேவை, என்று ஒரு முஸ்லிம் நம்பினால்
அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்றுகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு கப்றுகளை சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.
தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.
அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தல் என்பது இறைத் தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.
கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி பயணிக்க வேண்டும் என்ற கோஷம் குப்ரியத்தில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய வழிகள் களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்க பாடுபட வேண்டும்.
இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை. மாறாக அரசாங்க தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயற்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.”அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.அதனூடாக சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் கண்டித்துப்பேசினார்கள்.
மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்
லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்
ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராக போராடியபோதும்
தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரசார பணியினை ஆரம்பித்த போது தவ்ஹீதை முதன்மை படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள். எதிரிகள் இப்பிரசார பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்த போதும் நபிகளார்(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.நபிகளாருடைய பிரசாரப் பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தை தழுவியபின் மதீனாவை தளமாக கொண்டு படிப்படியாக கிலாபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள். மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புக்களும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.
எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.
இந்நிலையில் அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாவுக்கு முக்கியமில்லாமல் சடங்கு சம்பிரதாய கொள்கையில் மரணிக்கின்ற மக்களுடைய நிலையோ படுமோசமாகி விடும் என்பதை கிலாபத் பற்றி பேசுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
கிலாபத் ஏற்பட முன் அகீதா பற்றி; பேசப் பயப்படுபவர்கள் (ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்கள் பிரிவுகளின் ஆதரவில் கூட்டரசாங்கம் நடத்தினாலும்) கிலாபத் ஏற்பட்ட பின்பும் பேசவே மாட்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு நடந்து விடுமோ ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகி விடுமோ தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இருக்குமே தவிர அகீதாவை சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாவை அமுல்நடாத்துகின்ற பற்றிய எண்ணம் இருக்காது.
இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அத்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை ஏற்படுத்தமுடியவில்லை. இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாபத் பற்றி பேசி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமான் பற்றியும் ஆதாரபூர்வமான சுன்னாவின் நிழலின் அமல்கள் பற்றியும் போதிக்க முடியவில்லை. எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்; செய்யலாம். எமது கிலாபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.
புரட்சிகரமான கிலாபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை ஊட்டி பலபேருடைய ஹிதாயத்திற்கு வழிகாட்ட தயார்படுத்தலாம்.
மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயற்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் ¬குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அதை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால்; அதுவுமில்லை.
தங்களுடைய வீடுகளிலும் ஜமாஅத்திலும்; குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான விடயங்களை ஒதுக்காமல் செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும அகீதாவுக்கு முரண்பட்டவைகளை விற்பனைசெய்கிறார்கள்.
தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.
பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.
எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம்.
என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.
உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல.
இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் குறிப்பாக ஷீஆவும் காதியானியும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டு கொடுக்கும் இவர்களது தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபமே காரணம். படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தை கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்தஅணுகுமுறையே காரணம்.
ஈரானில் ஏற்பட்ட ஷீஆ புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்ததனால் இன்று ஷிஆயிஸம் வேகமாக பரவி வருகிறது. ஸஹாபாக்களை, நபிகளாரின் மனைவிமார்களை தவறாக சித்தரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (அவர்களது குடும்பத்திலும்) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து பிரசாரப்பணியினை செய்வோமாக!.

- இம்தியாஸ் ஸலபி

ரமழானும் தர்மமும்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.
“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.
நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).
ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள். எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.
ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.
உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.
தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

- இம்தியாஸ் ஸலபி

Wednesday, August 11, 2010

நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று சர்க்கரை விரைவில் அறிமுகம்!


தென் அமெரிக்க நாடான பராகுவே நாட்டில் உள்ள மக்கள் அங்கு விளையும் ஸ்டீவியா என்ற ஒரு வகை மூலிகைச் செடியின் இலைகளை பறித்து காய வைத்து பின்னர் அதை பொடியாக்கி, அதை சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்துகிறார்கள்.


நல்ல மணம் கொண்ட இந்த பவுடரை அந்த நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஸ்டீவியா மூலிகை செடியிலிருந்து தயாராகும் இந்த இனிப்பு தூளானது சர்க்கரையை விட 200 முதல் 300 மடங்கு இனிப்பானது ஆகும். என்று ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நல்ல மணமும் வாசனையும் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் நன்கு வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம்.
மேலும் இந்த ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதில் கலோரி எதுவும் இல்லையென்பதால் இதை பயன்படுத்துபவர்களுக்கு பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் பரி சோதனையில் கண்டுடறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா  செடிகளை இந்தியாவில் பயிரிடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது. என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறினார்.

இனிய ரமழான் வாழ்த்துக்கள்

இந்த புனித மாதம் எம்மிடையே நல்ல சிந்தனையையும் தூய எண்ணத்தையும் ஏற்படுத்தி, நம்முடைய அமல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக வேண்டும். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள போதுமானவன்.

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்

இம்தியாஸ் புஹாரி
 

Tuesday, August 10, 2010

இண்டர்நெட் எனும் மாயவலை பாதுகாப்பாக கையாள...

1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக... 'வீட்டுக்கு ஒரு மரம்' என்று சொல்லப்படுவது போல்... 'வீட்டுக்கு ஒரு கணினி' என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!

அதன் மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் 'இன்டர்நெட்' எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்... அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.
கற்றுக் கொள்ளுங்கள்... கையாளுங்கள்... இன்டர்நெட்டையும் வாழக்கையையும் அழகாக!

சாஃப்ட்வேர்... சிறு அறிமுகமும் சில தகவல்களும்!
கணினியின் இதயம்... சாஃப்ட்வேர்! அந்தளவுக்கு கணினியின் இயக்கத்துக்கு முதற் காரணமாக இருக்கும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பற்றிய அடிப்படை விவரங்கள் அறிவோமா..?
1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.
2. அசல் மென்பொருட்களைவிட, அவற்றின் போலி பாதிப்புகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், 'களையெடுப்பு' நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.
3. கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால், நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும். எனவே, கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் 'பேக்-அப்' எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காகவே இலவச மென்பொருட்கள் இணையத்தில் உலவுகின்றன.
4. நம் கணினியில் நீண்ட காலம் பயன்படுத்தாத மென்பொருள் தொகுப்புகளைத் தயங்காமல் அகற்றிவிட வேண்டும். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்வதோடு, வைரஸ்களின் தாக்குதலுக்கும் அவை எளிதில் ஆளாகக் கூடும்.
5. தேவையில்லாத மென்பொருட்களை நிரந்தரமாக அகற்றுவதற்கு, கன்ட்ரோல் பேனல் (Control panel) சென்று, சேர்த்தல் அல்லது நீக்கல் (Add or remove programs) செய்வதற்கான ஐகானை கிளிக் செய்து, ஒவ்வொரு மென்பொருளாக தேர்வு செய்து அகற்றலாம்.

இணையுங்கள் இணையத்தின் தேடுதல் (Search Engine) வேட்டையில்!
இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த 'ஸர்ச் இன்ஜின்'களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்...
6. இணையத்தின் 'டாப் ஒன்' தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, 'கூகுள்'தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. '1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்' என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
7. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.
8. ஸர்ச் இன்ஜின்களில் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், துல்லியமான தகவல்களைப் பெறலாம்.
9. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால், சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + realestate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.
10. பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
11. உதாரணமாக, சூப்பர் ஸ்டார் என்ற சொல்லைத் தேட வேண்டும்... ஆனால், தேடலின் முடிவில் ரஜினிகாந்த் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், சூப்பர்ஸ்டார் - ரஜினிகாந்த் (Superstar - Rajinikanth) என்று தேடுங்கள்.
12. 'நான் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம்' என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள். உதாரணமாக, "அவள் விகடன்'' ("Aval Vikatan").
13. குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு ''~''' என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ''அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர் ("Aval vikatan ~ Women Welfare").
14. ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ''டிஃபைன்: (''define:") என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, டிஃபைன்:பெலிசியேஷன் ("define: felicitation").

விரைவான தகவல் தொடர்புக்கு கை கொடுக்கும் மெயில்... இ-மெயில்!
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல... உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில 'கவனிக்க' சங்கதிகள் இங்கே...
15. முன்பெல்லாம் மின்னஞ்சல்களின் கொள்ளளவு மிகச் சிறியதாக இருந்ததால் பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. இப்போது போட்டி காரணமாக, மின்னஞ்சல் சேவை அளிக்கும் ஒவ்வொரு இணையதளமும் 1 ஜி.பி. மற்றும் அதற்கு மேல் கொள்ளளவுள்ள வசதியைத் தருகின்றன.
16. ஜி-மெயில் மின்னஞ்சலில் 20 எம்.பி. அளவு வரை கோப்புகளை இணைப்பாக அனுப்பலாம். இதுவே அதிகபட்ச இணைப்பு அளவாக இருந்தது. ஆனால், யாஹ" இப்போது அதிரடியாக 100 எம்.பி. வரை இணைப்பாக கோப்புகளை அனுப்பும் வசதியை தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது.
17. மின்னஞ்சல் அனுப்பும்போது மிகுந்த கவனம் தேவை. அனுப்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீங்கள் டைப் செய்தவற்றை முழுதாக படித்துவிடுங்கள். அவசரப்பட்டு send பட்டனை அழுத்திவிட்டால் அவ்வளவுதான்... மின்னல் வேகத்தில் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மின்னஞ்சல் சென்று விடும்.
18. 'அவுட்லுக்' மற்றும் 'அவுட்லுக் எக்ஸ்பிரஸ்', சொந்தமாக வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற மின்னஞ்சல் புரோகிராம்கள். இதில் இணைய இணைப்பு இல்லாமலும் மின்னஞ்சல்களைப் படிக்கலாம். ஜி-மெயில், யாஹ" என எந்த மின்னஞ்சல்களையும் இவை பதிவிறக்கித் தரும்.
19. 'அவுட்லுக்' மூலம் மின்னஞ்சல் அனுப்பும்போது, முதலில் 'அவுட்பாக்ஸ்' (Outbox) பகுதியில் உங்கள் மின்னஞ்சல் நிறுத்தப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அனுப்பப்படும். எனவே, தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பினால்கூட, 'அவுட்பாக்ஸ்' சென்று அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.
20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. 'ஃபார்வேர்ட்' (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
21. உங்கள் மின்னஞ்சலில் 'தானியங்கி பதில் செய்தி அனுப்பும் வசதி'யை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோருக்கு உடனடியாக, 'உங்கள் மெயில் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்' என்பது போன்ற செய்திகள் சென்று சேரும்.

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் 'ஸ்பேம்' எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே...
22. உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.
23. ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை 'ஸ்பாமர்கள்' எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.
24. இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.
25. அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.
26. தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.
27. குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.
28. உங்கள் மின்னஞ்சல் கணக்கின் 'ஸ்பேம்' பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.
29. தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு 'என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்' என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

வைரஸை (Virus) விரட்டுவோம்!
நம் கணினியின் இயக்கத்தை தாமதப்படுத்தும், ஸ்தம்பிக்க வைக்கும், ஒரு கட்டத்தில் செயலிழக்க வைக்கும் வில்லன்கள்தான் வைரஸ்கள்! அந்த வில்லன்களிடமிருந்து நம் கணினி கன்னுக்குட்டியைக் காப்பாற்றுவதற்கு பிடியுங்கள் இந்த டிப்ஸ்களை!
30. வைரஸ்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். சில வைரஸ்கள் சிறிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை சாதாரண 'ஆன்டி வைரஸ்' மென்பொருட்களை வைத்து அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து மொத்தத்தையும் காலியாக்காமல் விடாது.
31. ஸ்பைவேர், ஆட்வேர், ட்ரோஜான், மால்வேர் என பல்வேறு வடிவங்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றுள் ட்ரோஜன் மிக மோசமானது.
32. இணையத்திலிருந்து ஏதேனும் மென்பொருள் அல்லது புரோகிராமை பதிவிறக்கும்போது, அவற்றுடன் ட்ரோஜனும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். அதன் பின் நம் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு அபகரிக்கப்படும்.
33. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.
34. கம்ப்யூட்டரில் அவ்வப்போது 'ஆட்டோமேடிக் அப்டேட் செய்து கொள்ளுங்கள்' என்ற செய்தி தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் விண்டோஸ், இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், மைக்ரோசாஃப்ட் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
35. இணையத்தில் உலவும்போது குட்டித் திரைகளில் தோன்றும் விளம்பரங்களில் பெரும்பாலானவை வைரஸ்களின் தூரத்துச் சொந்தங்களாக இருக்கும். எனவே, டோன்ட் டச் இட்!
36. இணையத்திலிருந்து முன் பின் தெரியாத புரோகிராம்கள், விளையாட்டுக்களை பதிவிறக்குவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அவை வைரஸ் விருந்தாளிகளாக இருக்கலாம்.
37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
38. இணையத்திலிருந்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை (ஆன்டி வைரஸ்) இலவசமாக பதிவிறக்கும்போது கவனம். சில நேரங்களில் இந்த இலவசங்களுடன் சேர்த்து வைரஸ்களும் இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே முறையான, நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
39. முன் பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக, இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
நண்பர்கள், உறவுகளை, புதியவர்களை இணையத்தில் இணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் (Social networking sites)!
தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைய பயனாளர்கள் அனைவரையும் ஆட்டிப் படைப்பது சமூக வலையமைப்பு எனும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்தான். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் இணைய உலகில் உள்ளன. அவை பற்றி கொஞ்சம்... கொறிக்க!
40. இந்தியாவில் ஃபேஸ்புக், ஆர்குட் ஆகிய தளங்கள் புகழ்பெற்றவை. ஆர்குட் என்பது கூகுளின் சேவை. மிக அதிகமான பயனாளர்களைக் கொண்ட இந்த சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டது ஃபேஸ்புக்.
41. சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பெண்களில் இளவயதினர் அதிகளவிலும், ஆண்களில் நடுத்தர வயதினர் அதிகளவிலும் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
42. இந்தியாவில் ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்தான் அதிகளவில் பயனாளர்கள் இருப்பதால், இந்த இரண்டு சேவைகளும் போட்டி போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகின்றன.
43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.

ஹேக்கிங் (Hacking)... கவனம்!
நமக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துக்களை, அதாவது ஆன்லைன் சொத்துக்களை நம் கண் முன்னாலேயே அழகாக அபகரித்துச் செல்வதே ஹேக்கிங். அதைப் பற்றி சில துளி தகவல்கள் இங்கே...
44. ஹேக்கிங் என்பது இன்று நேற்று முளைத்த சொல் இல்லை. 1900-ம் ஆண்டுகளிலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஹேக்கிங்கின் தொடக்கம் என்று கூறுகின்றனர்.
45. ஹேக்கிங் என்ற முறைகேட்டை எல்லோராலும் செய்து விட முடியாது. உலகின் மிகச்சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 100 பேரைத் தேர்வு செய்தால், அவர்களுள் 80 பேர் ஹேக்கர்களாக இருப்பர்.
46. அதிக தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் என பல சிறப்புகளைப் பெற்றிருப்பவர்தான் முழுமையான ஹேக்கராக முடியும்.
47. இணைய இணைப்புதான் ஹேக்கிங் மன்னர்களுக்கு முதுகெலும்பு. இணையத்தில் நாம் உலவுவதை கண்காணித்து, நம்மைக் குறிவைத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களுக்குள் நாம் ஹேக்கிங் வளையத்துக்குள் சிக்கிவிடுவோம்.
48. சிலருக்கு 'பாப் - அப்' திரைகள் மூலம் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகள் தோன்றும். சிலருக்கு, 'உங்கள் கம்ப்யூட்டர் ஆபத்தில் உள்ளது' என்பது போன்ற எச்சரிக்கைச் செய்திகள் தோன்றும். இதுபோன்ற செய்திகளை கிளிக் செய்துவிட்டால் முடிந்தது கதை.
49. பொதுவாக இந்த ஹேக்கர்கள், ஏதாவது ஒரு சிறிய ஓட்டை வழியாக தண்ணீரைப் போல ஊடுருவி, நம்மை மூழ்கடித்து, நம் அறிவுசார் சொத்துக்கள், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் சேவைத் துறை என்று நாம் பயன்படுத்தும் பலவற்றையும் தங்கள் வசம் வளைத்துக் கொள்வார்கள்.
50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.
51. வொயிட் ஹேட், க்ரே ஹேட், ஸ்கிரிப்ட் கிட்டி, பிளாக் ஹேட் என ஹேக்கிங்கில் பலவகை உண்டு. இவற்றுள் பிளாக் ஹேட் மிக மோசமானது. நம் வங்கிக் கணக்குகளை மொத்தமாக முடக்கி பணத்தை அபகரிக்கும் ஹேக்கிங் இது.
52. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் சந்தேகப்படும்படியான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் அளிக்கும்போது கவனமாக இருந்தால், ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்கலாம்.

ஆக்டிவ்வாக இருங்கள் ஆன்லைனில்!

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை... ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக...
பயன்படுத்துங்கள் ஆன்லைன் பேங்க்கிங் (Online Banking)!
53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.
54. ஆன்லைன் வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.
55. இப்போது 'பிஷ்ஷிங்' (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் 'பிஷ்ஷிங்'!
56. இதுபோன்ற தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.
57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.
58. சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.
59 ஆன்லைன் பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.
60. சொந்த கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.

நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (Online ticket booking)!
61. ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.
62. பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.
63. ஆன்லைனில் 21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
64. இப்போது தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்றும் கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது).
65. சாதாரண தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!
66. ஷாப்பிங் என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.
67. ஆன்லைன் ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்
68. முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!
69. நம்பத் தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
71. சற்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
72. இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.
73. ஒவ்வொரு முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
74. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.
75 உதாரணமாக, indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்!
5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.
76. இணையத்தில் தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
77. முன்பெல்லாம், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.
78 யூ-டியூப் (www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.
79 திரைப்படங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.
80 பாடல்களைக் கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.
81. ஆன்லைனில் பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.
82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.
83. சீரியஸாக ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, 'இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?' என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.
84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
'ஜி-டாக் (Google Talk)'-ல் பேசுங்கள்... 'சாட்'டுங்கள்!
85 நண்பர்களுடன் அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். 'யாஹ" மெசெஞ்சரை' கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது 'ஜி-டாக்'.
86. ஜி-மெயில் சேவையின் அங்கம்தான் 'ஜி-டாக்' என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
நம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)!
கடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்தகங்களும், மின் பத்திரிகைகளும்!
87. இணையத்தில் தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.
88. இணைய தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.
89. புத்தகங்கள் பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.
90 பல தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.
91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.
92. உதாரணமாக, அவள் விகடன் உள்ளிட்ட விகடன் பதிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென ஆண்டுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.
பிளாக் (Blog)... நமக்கே நமக்காக இணையத்தில் ஓர் இடம்!
நம் கருத்துக்களை, எண்ணங்களை எந்த தயக்கமும் இன்றி முழு சுதந்திரத்துடன் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் இடம்தான் 'பிளாக்' எனப்படும் வலைப்பதிவு. இணையதளங்களைப் போலவே, ஆனால், பைசா செலவில்லாமல் இலவசமாக நமக்கான வலைப்பக்கத்தை நிர்வகித்து, தகவல்களைப் பகிரலாம்.
94. பிளாக்கர் (www.blogger.com), வேர்டுபிரஸ் (www.wordpress.com) உள்பட பல இணையதளங்கள், வலைப்பதிவு சேவை அளிக்கின்றன. நமக்கான பக்கத்தின் வடிவமைப்புக்குத் தேவையான டெம்ப்ளேட்களையும் இலவசமாகவே தருகின்றன. தொழில்நுட்ப அறிவு என்பது வலைப்பதிவுகளுக்குத் தேவையில்லை.

95. நமது வலைப்பதிவைப் பிரபலப்படுத்துவதற்காகவே திரட்டிகள், அதாவது வலைப்பதிவுகளை ஒருசேர காட்சிக்கு வைக்கும் தளங்கள் உதவுகின்றன. www.tamilish.com, www.tamilmanam.net போன்ற திரட்டி தளங்களில் நமது வலைப்பதிவுகளை பதிவு செய்து பிரபலப்படுத்தலாம்.
வேலைவாய்ப்புக்கும் 'க்ளிக்'குங்கள்!
மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் முதுகெலும்பாக இருக்கின்றன இணையதள சேவைகள். தற்போதுள்ள சூழலில் 90% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, ஆன்லைனிலேயே நடக்கிறது.
96 www.naukri.com, www.monsters.com, www.jobsdb.com உள்பட நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.
முடிவில்லா இணையவெளியில் எச்சரிக்கை உணர்வும் அவசியம்!
இன்டர்நெட்டில் அழகான ஸ்வீட்டும் உண்டு; ஆபத்தான பாய்ஸனும் உண்டு. எனவே, சில அலர்ட் டிப்ஸ்கள்...
98 எந்த ஒரு சிறந்த சேவைக்கும் குறைகளும் இருக்கும். இது இணையத்துக்கும் பொருந்தும். கொடுத்த முழு சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இணையத்தில் அதிகம். நமக்குத் தெரியாமல் அவர்கள் பக்கம் நாமும் சாயக் கூடும், அல்லது அவர்கள் வலையில் விழக்கூடிய சூழல் ஏற்படும்.
99. இணையத்தில் உலவும்போது, பார்வையிடும் இணையதளங்கள் அனைத்திலும் உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். சில மோசமான தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தவறாக பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் கணக்கையே ஒன்றுக்கும் உதவாதது என்றாக்கிவிடுவார்கள். எச்சரிக்கை!
100 உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பரிசுகள் அனுப்பியிருப்பதாக மின்னஞ்சல் வரும். அதைக் கிளிக் செய்த சில நிமிடங்களில், உங்கள் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும், அதே மின்னஞ்சல் செல்லும். அதில் நீங்கள் பரிசு அனுப்பியதாக செய்தி தோன்றும். இதனால் உங்கள் நற்பெயர் கெடும்... கவனம்!
இன்டர்நெட்டை கூலாக, கொஞ்சம் கேர்ஃபுல்லாக பயன்படுத்துங்கள்! பலன்கள் பல பல பெறுங்கள்!
யுரேகா... யுரேகா...
ல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமெடீஸ், அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள்... 'யுரேகா... யுரேகா' (கண்டுபிடித்துவிட்டேன்... கண்டுபிடித்துவிட்டேன்). ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்தக் குரல் ஓயவில்லை. தினம் தினம் உலகம் முழுக்க புதிது புதிதாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் விஷயத்தில் நிமிடங்களுக்கு ஒன்றாகக் கூட புது விஷயங்கள் முளைக்கின்றன. பல முனைகளில், பலதரப்பட்டவர்களும் மூளையைக் கசக்கிக் கொண்டு உழைப்பதால் நிகழும் அற்புதம் அது! அப்படிப்பட்ட அற்புதம் மற்றும் அதை உருவாக்கியவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் ஆங்காங்கே இடம் பிடிக்கின்றன இந்த சின்ன புத்தகத்தில்...!

ங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்... கம்ப்யூட்டர்...! இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?
'டிஃபரன்ஸ் இன்ஜின்' என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால், அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் 'சார்லஸ் பாப்பேஜ்'. இவரைத்தான், 'கம்ப்யூட்டரின் தந்தை' என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால், பல பரிணாமங்களைக் கண்டு... இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது.

ன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்?
உலகை ஆளும் 'இன்டெர்நெட்'டை உருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.
முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் 'நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்' என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் 'யு.சி.எல்.ஏ.' என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.

மெயில் அனுப்புவது என்றாலே... ஒரு காலத்தில் அது 'யாஹ"' என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் 'கரிகுலம் வீட்டாய்' எழுதும்போது 'யாஹ"' மெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹ" நிறுவனத்தை நிறுவியவர்கள்... ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.


'கூகுள்' என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், 'ஸர்ச் இன்ஜின்' எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை. 1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்!

'ஆர்குட்' எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது... 2004 ஜனவரியில். உருவாக்கிய 'ஆர்குட்' பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்... பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ... வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.

ண்ணுக்குத் தெரியாத 'செல்' தொடங்கி, காணவே முடியாத 'அண்டம்' வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா... ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. 'ஜிம்போ' என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர்.

ம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் 'சிக்ஸ்த் சென்ஸ்' எனும் டெக்னாலஜி... பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது. 'மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு' என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே... போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார்.

இது வலையில் பூத்த பூ

Monday, August 09, 2010

சிறப்பாக புரிந்துகொள்வது எப்படி?

சரியாக புரிந்துகொள்ளுதல் என்பது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறவதற்கு, அவசியமான திறன்களில் ஒன்று. ஆனால் இதன் முக்கியத்துவம் தெரியாததாலே பலரும் தோல்வியை சந்திக்கின்றனர்.
வகுப்பறை, கருத்தரங்கு, தொழில் கூட்டம், நண்பர்களுடனான சாதாரண கலந்துரையாடல் என திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத தகவல் பரிமாற்றத்தின் போது, சரியாக புரிந்துகொள்ளும் திறன் தவிர்க்க முடியாத ஒரு திறனாகிறது. நமது கல்வி முறையிலும் கவனித்தலுக்கே முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான மாணவர்கள் சரியாக புரிந்துகொள்வதில் பின்னடைவையே சந்திக்கின்றனர். சிறப்பான தகவல் பரிமாற்ற திறன்களில் சரியாக புரிந்துகொள்ளும் திறனும் ஒன்று. மாணவர்களிடம் இத்திறனை மேம்படுத்தாமல், பெரும்பாலான கல்வி நிறுவனங்களால் ஒதுக்கப்பட்டும் வருவது கவலைக்குரியது.
எந்த ஒரு கலந்துரையாடல், தகவல் பரிமாற்றத்தின் போதும் சரியாக கவனித்தலும், மூச்சு விடுவதைப் போல், தன்னிச்சையாக நிகழும் அளவிலான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறப்பான பேசும் ஆற்றலை பெற்றிருப்பவர்களும், கவனித்தல் திறன் குறைவாக இருப்பின், தோல்வியையே சந்திக்க நேரிடும். தவறான புரிதலின் காரணமாக, தொடர்பில்லாதவற்றை பேசும் போது, அந்த உரையாடல் எப்படி வெற்றிகரமானதாக இருக்க முடியும்?
மிகச் சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு, சிறப்பான கவனித்தில் திறன் மிக முக்கியம், என்பது அனுபவமிக்க பேச்சாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து. சிறந்த தகவல் பரிமாற்றத்தில் 80 சதவீத பங்கு கவனிக்கும் திறனை சார்கிறது; மீதமுள்ள 20 சதவீத பங்கு தான் பேச்சு திறனுக்கு... எனவே, ஒரு சாதனை தொடர்பியலாளராக, முதலில் துல்லியமான புரிந்துகொள்ளும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
பள்ளி பருவத்தில் இருந்தே கவனிக்கும் திறனை வளர்த்திக்கொள்வதில், அதிக கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பலர் காலம் கடந்தபிறகு வருந்துகின்றனர். துல்லியமாக புரிந்துகொள்ளுதல் என்பது யாருக்கும் எளிதாக அமைவதில்லை. அதிக ஆர்வமும், தொடர் பயிற்சியும் இதற்கு தேவை. எப்பொதும் சாந்தமாகவே இருக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தால், இத்திறனை வளர்த்துக்கொள்ளவது சற்று கடினமாகவே அமையும். எனினும், இத்திறனுக்கான அவசியத்தை உணர்ந்து, அதனை வளர்த்துக்கொண்டு சாதனை படைத்தவர்களும் பலர். இது உங்களாலும் முடியும்...
சரியாக புரிந்து கொள்ள முடியாததற்கான பொதுவான காரணங்கள்:
* ஒருவர் பேசி முடிக்கும் வரை, காத்திருந்து கேட்கும் பொறுமை குறைவாக இருத்தல்.
* ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவற்றை கவனிக்காமல் சுய கனவுகள், திட்டங்கள் போன்றவற்றில் மனதை செலுத்துவது.
* அடிக்கடி மனதில் தோன்றும் தொடர்பில்லாத நினைவுகளை கட்டுப்படுத்தும் திறன் இல்லாதது.
* மனதில் தோன்றும் சிந்தனைகளை வரிசைப்படுத்தாமல், குழம்புவது.
* சிறப்பான கவனித்தல் திறனுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பல நேரங்களில் நவீன தொழில்நுட்பம் விளங்குகிறது. உதாரணமாக, மொபைல், எஸ்.எம்.எஸ்., இ-மெயில், டிவி.
* கோபம், பயம், கவலை, மன இறுக்கம் போன்ற தனிப்பட்ட ஒருவரின் மனநிலை.
* ஒருவர் பேசும்போது, அவர் இதைத்தான் கூற வருகிறார் என முன்கூட்டியே யூகித்துக் கொள்வது.
* அதிகம் பழக்கம் இல்லாத மொழியை பயன்படுத்தப்படும்போது.
* இரைச்சல் போன்ற சுற்றுப்புற காரணங்கள்.

இதுபோன்ற காரணங்களை தவிர்த்து, சரியாக புரிந்துகொள்வது எப்படி?
* ஆசிரியர் அல்லது பேசுபவரின் கண்களை பார்த்து, உன்னிப்பாக கவனிப்பது. (‘ஐ கான்டேக்ட்’ - இதற்கு சில நேரங்களில் வாய்ப்பு இல்லாமல் போகலாம்)
* திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையிலான கவனித்தல்.
* எந்த ஒரு விரிவுரை அல்லது பேச்சுக்களை கேட்கும்போதும், திறந்த மனதுடன் கவனியுங்கள்.
* பேசுபவரின் வார்த்தைகளை படமாக மனதில் பதியுங்கள்.
* உங்களது முடிவுகளை வலுக்கட்டாயமாக யாரிடமும் திணிக்காதீர்கள். இடைமறித்து பேசாதீர்கள்.
* ஒருவர் பேசுவதில், உங்களுக்கு புரியாததை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் முறையான கேள்விகளை கேளுங்கள். அதேசமயம், உங்களது கேள்வி பேசுபவர் சொல்ல வரும் கருத்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
* பேசுபவர் எந்த உணர்வோடு பேசுகிறாரோ, அதை நீங்களும் உணர முயலுங்கள்.
* தலை அசைவு அல்லது உற்சாகமான வெளிப்பாட்டுடன் பேச்சாளருக்கு பதிலளியுங்கள்.
* மன ரீதியாக உள்ள இடர்பாடுகளை முற்றிலுமாக களைந்துவிடுங்கள்.
* பேசுபவர் பயன்படுத்தும் உச்சரிப்பு, செய்கை போன்றவற்றையும் கவனித்தால் அவர் சொல்லவரும் கருத்துக்களை கவனிக்க முடியாமல் போகும் என்று தோன்றினால், அவரது கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து கேளுங்கள்.
* உங்களது சொந்த கருத்துக்கள், உணர்வுகளை நீங்களாக மனதில் ஓடவிட்டால், பேசுபவர் சொல்லவருவது உங்களுக்கு புரியாமல் போகலாம். எனவே, அவற்றை தவிர்த்துவிடுங்கள்.
* நீண்ட நேர விரிவுரையை கேட்க வேண்டியிருந்தால், முக்கிய விஷயத்தை மட்டும் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
* கையாள்வதற்கு கடினமானவர்களுடன் பேச நேர்ந்தால், நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்த்து, அவர் பேசுவதை கேட்பதற்கு அதிக நேரத்தை செலவிடுங்கள்.
* பேசுவதை கேட்பதா? அல்லது நீங்கள் பேசுவதா? என்பதில் சந்தேகம் இருந்தால், அவர் பேசுவதை கவனிப்பதே நல்லது.

 நன்றி : கல்விமலர்

Saturday, August 07, 2010

மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை "குரல்வளையில் மிதிப்பேன்'' என்று சீறினார், ஒபாமா. ஆண்டர்சன் பாதுகாப்பாக இருக்கிறார் - -நியூயார்க்கில்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் கருப்பாகி நிற்கிறது. பெட்ரோலிய எண்ணெய் கடலெங்கும் விரவி, மெக்சிகோ வளைகுடாப் பகுதி முழுவதும் படர்ந்திருக்கிறது. கடற்பறவைகள் அந்த எண்ணெயின் பிசுபிசுப்பில் பறக்கமுடியாமல் மூச்சுத் திணறி கரையொதுங்கி செத்துக் கிடக்கின்றன. பலவகையான மீன்கள், திமிங்கிலங்கள், ஆமைகள் என கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் செத்து மிதக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பேரழிவு தொடர்கிறது.
மெக்சிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியன்று கடலில் அமைந்துள்ள துரப்பண மேடையின் அடியில், 5000 அடி ஆழத்தில், குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் 11 தொழிலாளிகள் மாண்டு போயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிப்பினால் எண்ணெயும் வாயுவும் பீறிட்டுக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 15 முதல் 25 இலட்சம் காலன் (ஒரு காலன் 3.8 லிட்டர்) வெளியேறிய எண்ணெய், அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் பரப்பளவுக்கு இணையான அளவு கடலில் தேங்கி நிற்கிறது .
இதை எப்படித் தூய்மைப்படுத்துவது, வெளியேறும் எண்ணெய் கசிவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. இந்த எண்ணெய் கசிவினால், மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் மீன்பிடித் தொழிலும் படகுப் போக்குவரத்தும் வணிகமும் சுற்றுச்சூழலும் நிலைகுலைந்துள்ளன.
"பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் ஏற்படுத்திய மிகக் கொடிய சுற்றுச்சூழல் கேட்டிற்கும் பொருளாதார இழப்புக்கும் தண்டத் தொகைக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை குரல்வளையில் மிதிப்பேன்" என்று சீறினார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் கசிவு மூலம் சுற்றுச் சூழலை நாசப்படுத்திய குற்றத்துக்காக 2000 கோடி டாலர் தொகையும், விபத்தில் பலியான மற்றும் படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கும், அந்த நிறுவனத்தில் தற்போது வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கும் 10 கோடி டாலர் தொகையும் இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மெக்சிகோ வளைகுடாவில் குழாய் வெடித்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோது மாண்டுபோன தொழிலாளர்கள் 11 பேர். ஆனால் போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் மேல். மெக்சிகோவில் நடந்ததைவிட மிகக் கொடிய பேரழிவு போபாலில் நடந்துள்ளது. மெக்சிகோ விபத்துக்குக் கிடைத்த இழப்பீடு 2000 கோடி டாலர்கள். இன்னமும் பலரை முடமாக்கிக் கொண்டிருக்கும் போபால் நச்சுவாயுப் படுகொலைக்குக் கிடைத்த இழப்பீடும் நிவாரணமும் வெறும் வெறும் 47 கோடி டாலர்கள்தான்.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால், வழங்கப்படும் தீர்ப்பும் இழப்பீடு தொகையும் வேறு. இந்திய நீதிமன்றத்தில் அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக வழக்கு நடந்தால், வழங்கப்படும் தீர்ப்பும் இழப்பீடும் வேறானது. இதுதான் அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை. அமெரிக்காவில் நடந்தால் அது பேரழிவு. அதுவே இந்தியாவில் நடந்தால் சாதாரணமானதொரு ஆலை விபத்து. ஏனென்றால், அமெரிக்கா ஒரு வல்லரசு. இந்தியாவோ ஒரு ஏழை நாடு. ஏழை நாடுகளைப் பொருத்தவரை அமெரிக்காவின் அணுகுமுறை எப்போதுமே அலாதியானது.
சுற்றுச்சூழலை நாசமாக்கிய இப்பேரழிவுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும் அதன் தலைமை நிர்வாகியான டோனி ஹேவர்டும்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறது, அமெரிக்க வல்லரசு. ஆனால், அதே அமெரிக்க வல்லரசு போபால் படுகொலைக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவருமான வாரன் ஆண்டர்சன் இதற்குப் பொறுப்பல்ல என்று கூறி, அவனைப் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து அனுப்ப நிர்பந்தித்தது. எந்த நாட்டில் வேண்டுமானாலும் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளைக் கைது செய்து கொண்டுவர அமெரிக்கப் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளிக்கிறது, அமெரிக்க நீதிமன்றம். ஆனால், பயங்கரவாதக் கிழவன் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் உல்லாசமாக அமர்ந்திருக்க முடிகிறதே, அது எப்படி? ஏனென்றால், அமெரிக்கா என்பது ஒரு பேரரசு. அதன் நாகரிமும் நீதியும் அலாதியானது.
நைஜீரியாவில், பன்னாட்டு ஏகபோக எண்ணெய் நிறுவனமான ஷெல் நடத்திய சூறையாடலால் நைஜீரியாவின் ஓகோனி பிராந்தியத்தின் நிலமும் நீரும் நாசமாகி பேரழிவுகளும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும் தொடர்ந்தது. ஷெல் மற்றும் பிற ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக எழுத்தாளரும் சுற்றுச்சூழலாளருமான கென் சாரோ விவா, ஓகோனி மக்களைத் திரட்டி அமைதி வழியில் போராடினார். நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசும் ஷெல் நிறுவனமும் கைகோர்த்துக் கொண்டு அந்த இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்கி, சாரோவைக் கைது செய்து சிறையில் அடைத்து, 1995-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாளன்று கென் சாரோ விவா உள்ளிட்ட ஒன்பது போராளிகளைத் தூக்கிலிட்டுக் கொன்றன.
இப்பயங்கரவாதத்தை எதிர்த்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் சுற்றுச்சூழல் இயக்கங்களும் ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை அனைத்துலக அரங்கில் மேற்கொண்டன. பிரிட்டிஷ்- டச்சு பன்னாட்டு நிறுவனமாக இருந்தபோதிலும், ஷெல் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் இருப்பதால், அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் நிறுவனத்துக்கு எதிராக ஓகோனி மக்கள் அனைவரின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஷெல் நிறுவனத்தின் கொலை குற்றங்கள், இயற்கை வளங்களை அழித்து மாபெரும் சுற்றுச்சூழலை நாசமாக்கிய கொடுங்குற்றங்களுக்காகவும் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் டாலர் இழப்பீடு தொகை அளிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. ஷெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனித உரிமைகளைக் காத்து நிற்பதுபோல நாடகமாடிய அமெரிக்க வல்லரசு, போபாலில் மனிதநேயத்தையும் மனித உரிமைகளையும் தனது இரும்புக் கால்களில் போட்டு நசுக்கியது.
போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமையகமும் அமெரிக்காவில்தான் இருக்கிறது. அன்று அமெரிக்காவில், போபால் வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்று வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு 1986-இல் தீர்ப்பு வழங்கினார், அமெரிக்க நீதிபதி ஜான் கீனன். "இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும், இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்குத் தேவையானதாக இருந்ததாலேயே, அவர்கள் இந்த ஆலையை இந்தியாவில் நிறுவ ஒப்புக் கொண்டனர்" என்றார் அந்த நீதிபதி. அதாவது ஏழை நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான நச்சு ஆலையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த நச்சு ஆலை ஏற்படுத்தும் ஆபத்துகளுக்கும் இழப்புகளுக்கும் இந்தியாவே பொறுப்பாகும் என்பதுதான் அவரது தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து.
பத்தாண்டுகளுக்கு முன்பு டபிள்யூ.ஆர்.கிரேஸ் என்ற அமெரிக்க நிறுவனம், பாஸ்டன் அருகே வோபர்ன் என்ற சிறுநகரத்தில் டிரைகுளோரோ எத்திலின் என்ற நச்சுக் கழிவைக் கொட்டி அதனால் குடிநீர் நஞ்சாகி பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கு அந்நிறுவனம் அளித்த இழப்பீடானது, போபால் படுகொலைக்கு வழங்கப்பட்ட இழப்பீடை விட பல மடங்கு அதிகம். இதேபோல ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அமெரிக்க ஆலை நிர்வாகங்கள் அளித்துள்ள இழப்பீடுகளும் போபால் பேரழிவுக்கு வழங்கப்பட்டதை விட மிக அதிகம். அமெரிக்காவில் இதே யூனியன் கார்பைடு நிறுவனம், தனது ஊழியர்கள் நச்சுத்தன்மை கொண்ட வேதியல் பொருட்களால் பாதிக்கப்பட்டபோது இரண்டாயிரத்து இருநூறு கோடி டாலர்கள் இழப்பீட்டுத் தொகை அளித்தது. அங்கே உயிர்ச்சேதமோ, போபாலில் நடந்ததைப் போன்ற பேரழிவோ இல்லை. ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? ஏனென்றால், இந்தியா ஒரு ஏழை நாடு. அதனால் இந்திய உயிர்கள் அவ்வளவு கேவலமானதாகிவிட்டது.
இதுவொருபுறமிருக்க, 1989-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எக்சான் எண்ணெய் நிறுவனத்தின் கப்பல் விபத்துக்குள்ளாகி, அலாஸ்கா அருகே கடலில் 10 மில்லியன் காலன் அளவுக்கு எண்ணெய் சிந்தி அப்பகுதியின் சுற்றுச்சூழல் நாசமாகியது. அந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மீன்கள் செத்து மிதந்தன, நீர்நாய்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டன. கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்த விபத்துக்கு இழப்பீடாக 50 கோடி டாலர்களை எக்சான் வழங்கியது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் ஏறத்தாழ 1000 டாலர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போபால் நச்சுவாயுவால், வாழ்க்கை முழுவதும் ஊனமாகிவிட்ட ஏழை இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை, ஒவ்வொருவருக்கும் 500 டாலர்கள்தான். இந்திய ஏழைகள் அமெரிக்க நீர்நாய்களைவிடக் கேவலமாகிவிட்டார்கள்.
ஏழைநாடான - அடிமை நாடான இந்தியா, அமெரிக்கா அல்ல என்பதுதான் இதற்குக் காரணம். இதுதான் பேரரசின் நீதி! இதுதான் ஏகாதிபத்திய உலகின் நாகரிகம்!
- மனோகரன்

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!

பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் ‎நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி ‎வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் ‎வேண்டாம். ‎

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ‎ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய ‎உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி ‎பத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் ‎கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க ‎வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் ‎அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் ‎மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது ‎முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை ‎விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை ‎விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும் ‎கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி ‎வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக ‎அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் ‎தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே ‎முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்”

“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் ‎செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து ‎கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது ‎அதிசயமான உண்மை. ‎

“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் ‎நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். ‎

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே ‎இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி ‎விடுவார்கள். நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி ‎வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎

கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் ‎நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளை… நாளை என்று நாளை ஒத்திப் ‎போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவே ‎ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே கிடைக்கும் ‎வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் ‎விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு ‎விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு ‎உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று ‎சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ‎ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது ‎விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு ‎என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி ‎முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை ‎முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு ‎இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி ‎வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம்.

Sunday, August 01, 2010

Automated Child Tracking System -ACTS

வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார் இருவரது மரணங்களைத் தொடர்ந்து, பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்று ஹை-டெக் தீர்வைக் கையில் எடுத்துள்ளது.
இப்புதியமுறை மூலம் வீட்டிலிருந்து பள்ளிவாகனத்தில் ஏறும் குழந்தைகள் வாகனத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்கள் அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சேர்ந்தனரா இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால், இப்புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாட்டிலைட் உதவியுடன் பல புதிய டெக்னாலஜிகளை உபயோகித்து, மிகுந்த பொருள் செலவில் இவ்வசதி செய்யப்படுவதற்கான கட்டாயத் தேவை யாது? எனும் வினாவுக்குப் பெட்டிச் செய்தியில் விளக்கமான விடை உள்ளது.
எதிர் வரும் செப்டம்பர், 2010 கத்தர் நாட்டில் அறிமுகமாகவிருக்கும் பள்ளிச் சிறார்களுக்கான இந்தத் தானியங்கிக் கண்காணிக்கும் முறை(Automated Child Tracking System -ACTS)யின் மூலம் பெற்றோர்களோடு, பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டைத் தனித் தனியே அறிந்து கொள்ள இயலும்.
"இந்தப் புதிய ஏற்பாடு, வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதத்தினை அளிக்கும்" என்கிறார் DPS பள்ளியின்  முதல்வரான A.K ஸ்ரீவஸ்தவா.
இப்புதிய ஏற்பாட்டிற்குத் தேவையான கருவிகளைப் பொருத்தும் பணியினைக் கத்தரில் உள்ள கணினி நிறுவனமான iNet Middle East செய்து வருகிறது. பள்ளிப் பேருந்துகளை சாட்டிலைட் உதவி கொண்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையில் automated Radio Frequency Identification (RFID)-இதில் பயன்படுத்தப் படுகிறது. இதற்காக iNet RFID, GPS (Global Positioning System) மற்றும் GPRS (General Packet Radio Service)ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.
RFID என்பது தானியங்கி முறையில் அடையாளம் கண்டுணரும் முறையாகும். இதற்காகவே  செய்தியின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள RFID அட்டைகளில் உள்ளீடு செய்யப் பட்ட விபரங்களைப் படிக்க, ரீடர்ஸ் எனப்படும் படிப்பான்கள் பள்ளிப் பேருந்துகளில் பொருத்தப்படும். பள்ளியிலுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் இந்த CHIP இணைக்கப்பட்ட அட்டையைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்பது முக்கிய விதியாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோர்களின் கட்டாயக் கடமை என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த முறைமூலம், ஒரு குழந்தை வீட்டிலிருந்து கிளம்பிப் பள்ளிப் பேருந்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் நொடிப்பொழுதில் SMS குறுஞ்செய்தி ஒன்று பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சென்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது.
இம்முறையை மற்ற இந்தியப் பள்ளிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
இதற்கான கருவிகளைப் பேருந்தில் பொருத்தும் iNet நிறுவனத்தின் மேலாளர் சுனில் நாயர் செய்தியாளர்களிடையே பேசும்போது, "இப்புதிய வசதியின் உதவியால் பேருந்து சென்று கொண்டிருக்கும் இடத்தை ரியல் டைமில் உடனுக்குடன் அறிந்து கொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட மாணவரோ மாணவியோ அந்தப் பேருந்தில் பயணித்தவாறு உள்ளனரா? என்பதையும் அறிந்து கொள்ளலாம்" என்றார்.
"இம்முறை பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும். இந்தமுறை பற்றிப் பெற்றோர்களுக்கு முறையான அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோரிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது" என்று மேலும் அவர் கூறினார்.
குறுஞ்செய்தி அனுப்பும் முறைகளில் பல்வேறு வசதிகளை பயனர் விரும்பியவாறு மாற்றம் செய்து கொள்ளலாம். பேருந்தின் இஞ்சின் நிறுத்திய பிறகும் ஒரு மாணவர் பேருந்திலிருந்து இறங்காமல் இருந்தால், அதைப் பள்ளி நிர்வாகிகள் சிலருக்குத் தகவலாக அறிவிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இரு இளம் தளிர்களின் கொடூர மரணம், புதிய முறையில் சிந்திக்கவும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குழந்தைகளின் பள்ளி வருகை உறுதிப் படுத்துவதற்கான வசதியினைச் செய்யவும் வழிகோலியுள்ளது. இறைவனடி சேர்ந்து விட்டத் தளிர்களின் அநியாயமான மரணத்திற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, பெற்றோர்களிடமிருந்து பரவலான கோரிக்கை எழுந்திருந்த நேரத்தில், இனிமேலும் இதுபோன்ற கவனக்குறைவான மரணங்கள் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கான வழி என்ன? என்பது குறித்துச் சிந்தித்ததும் பொருட்செலவைப் பெரிய விஷயமாக நினைக்காமல் அதற்கான வழியை நடைமுறைபடுத்த முன்வந்ததும் பாராட்டத்தக்க செயல்பாடாகும்.
அதே சமயம், பள்ளி நிர்வாகம் இப்புதிய திட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களைச் சரியாகப் பராமரித்து வருவதும் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறி, இறங்கி விட்டதை உறுதிப்படுத்த, தமக்கு வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களினதும் கடமையாகும். இழந்துவிட்ட இளந்தளிர்களின் பிரிவு இறுதியானதாக இருக்க பிரார்த்திப்போம்.
 Thanks : www.satyamargam.com