Sunday, May 30, 2010

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes) - இஸ்லாத்திற்கு வந்த விதம்

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.

இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பாத்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு, இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள்.

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திருத்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன்.

பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது.

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன?

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..

என் மனைவி என்னை நம்பவில்லை.

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.

dad,..... அப்போ நீங்கள்?

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:

1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.

2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.

3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm



உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத்

Friday, May 28, 2010

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..? (இன்ஷா அல்லாஹ்)

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .

அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .

இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .


இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.

எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .

நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??

"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."

I got caught in some cables but managed to scramble out

தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .


தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .

என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்


இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .

"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .


அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள்.



நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .

கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..

முக்கியமான தவறுகள்

விரைவான அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .

பொதிகளை கை விடாமல் இருத்தல்

முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .

தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .

விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்

அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .


பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .

இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.

Thanks to S.Sudharshan

Saturday, May 22, 2010

உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று

உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.

மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.

சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

நன்றி டாக்டர் முரளி M.D.S.

Wednesday, May 19, 2010

தோற்றுப் பார்!

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழுவெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்.

வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.

உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனைமுறை தோற்றிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். வாழ்க்கையில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்.

தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர்களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அழித்துவிடும். தோல்விகளைத் துச்சமென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.

எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.

தோற்று விட்டோமே என்று கவலைப்பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்விகளா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை ‘தேசப்பிதா’ என்று அழைக்கிறோம்.

தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை. அதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியைச் சந்திக்கும்போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன்கூட மிஞ்சி இருக்க மாட்டான்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனைப் பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து, எடிசன் வெற்றி கண்டார்.

அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.

"ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?"

"நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்".

சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை தோற்கும்போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்லக் கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்

நன்றி : ஆர்.வி. பதி, 'தன்னம்பிக்கை'

தகவல் : சகோ. அன்ஸார்

Wednesday, May 12, 2010

உறவுகளைப் பேணுவோம்

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
"யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து "யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்" என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
"இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்" எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.
சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவு
களுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
"நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்" என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.
இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
"யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.
"தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
"எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.
காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.
"நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.
இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு:
இரத்த உறவு
இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (59:22)
இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.
அல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாது
இரத்த உறவு
களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.
"(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை". (9:24)
நபி (ஸல்) அவர்களும், "உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் "குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்" அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!
- இஸ்மாயில் ஸலபி